கடலூர் அருகே பலாப்பழமும், குளிர்பானமும் சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், சிறுவனின் தாயே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடும்பத்துடன் குடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா (வயது 8) என்ற மகளும், பரணிதரன் (வயது 6) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பரணி மற்றும் அவரது மகன், மகள் மூவரும் வீட்டில் பலாப்பழம் சாப்பிட்டு விட்டு, குளிர்பானம் குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மூன்றுபேரும் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுவன் பரணிதரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, தாய் பரணி மற்றும் மகள் இனியா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது தாய் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குளிர்பானம் குடித்து உயிரிழப்பு நடந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், வேல்முருகன் தினமும் மதுகுடித்து வந்து பரணியிடம் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை அடித்து துன்புறுத்தியதால், இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு பரணி தவித்து வந்துள்ளார்.
இதேபேல், சம்பவத்தன்று வேல்முருகன் மது குடித்து வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பரணி குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து தானும் குடித்து விட்டு மகன் மற்றும் மகளுக்கும் கொடுத்துள்ளார். இதனாலேயே மூன்று பேரும் மயங்கியுள்ளனர். இதில், ஏற்கனவே மகன் பரணிதரன் உயிரிழந்த நிலையில், தற்போது தாயும் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








