பெரியார் சிலையை அவமதிப்பவர்களை பயங்கரவாதிகளாக கருதி தமிழ்நாடு அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் காமராஜர் சாலையில் பெரியார் சிலை அமைந்துள்ளது. புதுச்சேரி, நெட்டப்பாக்கம் பகுதியில் இருந்து டயர்களை, ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிர மாநிலத்தை நோக்கி சென்ற கனரக லாரி வழி மாறி காமராஜர் சாலைக்கு சென்றுள்ளது. வழி தவறி செல்வதை உணர்ந்த ஓட்டுநர் லாரியை திருப்ப முயன்ற போது காமராஜர் சாலையில் அமைந்துள்ள பெரியார் சிலையில் லாரி உரசியதில் சிலை உடைந்து கீழே விழும் சிசிவிடி காட்சி வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்த போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, திமுக, அதிமுக, திராவிடர் கழகம் மற்றும் விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக எம்.பி. ரவிக்குமார், பெரியார் சிலையை அவமதிப்பவர்களை பயங்கரவாதிகளாக கருதி தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.








