தோப்புவிளை பரலோக அன்னை ஆலய தேரோட்ட திருவிழா கொடியேற்றம்!

தோப்புவிளையில் அமைந்துள்ள பரலோக அன்னை ஆலய தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தோப்புவிளை பரலோக அன்னை ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கிறிஸ்தவ ஆலயம்…

தோப்புவிளையில் அமைந்துள்ள பரலோக அன்னை ஆலய தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தோப்புவிளை பரலோக அன்னை ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கிறிஸ்தவ ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் டீபன் அந்தோணி தலைமையில் புதிய கொடி மரத்தை  அர்ச்சித்து ஜெபம் செய்து கொடியை ஏற்றி வைத்தார். அதனைதொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் புதிதாக அமைக்கப்பட்ட நற்கருணை பேழையை ஜெபித்து திறந்து வைத்தார்.

இந்த கொடியேற்ற விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினமும் காலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி மாலையில் மறையுரை வழிபாடுகள் நடைபெறுகிறது.

மேலும் வரும் 14ம் தேதி 9ம் திருவிழா அன்று மாலை பொத்தக்காலன் விளை திருத்தல அதிபர் வெனிஸ் தலைமையில் திருவிழாமாலை ஆராதனை நடைபெற உள்ளது. பின்னா் சிகர நிகழ்ச்சியாக இரவு 10 மணிக்கு பரலோக மாதா தேரில் ரத வீதிகளில் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளாா். 15ம் தேதி 10ம் திருவிழா அன்று காலை தூத்துக்குடி மறைவு மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் பெருவிழா திருப்பலியும் நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் ஸ்டார்லின்மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.