புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்து சென்றனர்.
ஆன்மீகரீதியாக புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கமாகும்.
அந்த வகையில் பழமைவாய்ந்த தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. முதலாவதாக கோ பூஜை செய்யப்பட்டது.தொடர்ந்து விஸ்வ ரூப தரிசனமும் நடைபெற்றது.
தொடர் நிகழ்வாக பெருமாள் பத்மாவதி தாயார் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பெருமாளை தரிசிக்க அதிகாலை முதலே திரளான பக்தர்கள் காத்திருந்தனர்.
மேலும் வந்திருந்த பக்தர்களுக்கு பத்மாவதி தாயார் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது.மேலும் பிரசாதமாக புளியோதரை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
வேந்தன்







