தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் JSW எனும் தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலைகளை நிறுவியுள்ளது.
இக்காற்றாலைகளிலிருந்து மின்சாரத்தை எடுத்து செல்வதற்காக அப்பகுதிகளில் உயர் ரக மின்னழுத்த கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.குமரெட்டையாபுரம் ஊர் பொது மக்கள் காற்றாலை நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை மின் கம்பங்கள் அமைக்க விடாமல் விரட்டியடித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்வதற்காக உயர் மின் அழுத்த கம்பிகள் கொண்ட மின் கம்பங்கள் மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதி மற்றும் கோவில் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது,எனவே அரசாங்கம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் எங்களின் குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை உள்ளிடவற்றை கோவில்பட்டி வட்டாச்சியரிடம் ஒப்படைத்து விடுவோம் என தெரிவித்துள்ளனர்.அதன் முதல்கட்டமாக தான் இந்த கருப்பு
கொடி போராட்டம் நடைபெறுகிறது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
-வேந்தன்







