தூத்துக்குடி +2 மாணவி கொலை வழக்கு – குற்றவாளிக்கு இரட்டை தூக்குத்தண்டனை!

விளாத்திக்குளம் +2 மாணவி கொலைவழக்கு குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு, இரட்டை தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி, கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பாத நிலையில் மறுநாள் காலையில் அந்த மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்று வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்த நிலையில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு, இரட்டை தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2-ம் கூடுதல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தண்டனை விபரங்களை அறிவித்தார். குற்றம் நடந்த 75 நாட்களில் குற்றவாளிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.