தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் எலைட் நிறுவனம் இணைந்து நடத்திய போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தானை கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடியில் அரசின் சார்பில் ஏராளமான கலை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.சமீபத்தில் தான் புத்தக கண்காட்சி,நெய்தல் திருவிழா உள்ளிட்டவை நடைபெற்று முடிந்துள்ளன. அதனைதொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் எலைட் நிறுவனம் ஆகியவை இணைந்து போதைப்பொருட்களுக்கு எதிரான மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போதைப்பொருள் எனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம் என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இப்போட்டிகள் ஆண்,பெண் என் இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள அரசு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியை தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பி கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
21கிலோமீட்டர்,10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 21 கிலோ மீட்டர் பிரிவில் முதல் மூன்று இடங்கள் முறையே கென்யா நாட்டை சார்ந்த ஜேம்ஸ்,அணில் குமார் மற்றும் ரமேஷ் குமார் ஆகியோர் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் மற்றும் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் டீசர்ட்,பதக்கம்,பரிசு பெட்டகம், குளிர்பானங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
வேந்தன்







