திராவிட மாடல் என்பது கருத்தியல் போருக்கான பிரகடனம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் பிறந்தநாள் விழா:
திருமாவளவனின் 60வது பிறந்த நாள் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தகைசால் தமிழர் விருது பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
திருமாவளவன் ஏற்புரை:
விழாவில் ஏற்புரை வழங்கிய திருமாவளவன், திராவிட மாடல் என்பது வெறும் சொல்லாடல் அல்ல என்றும், இது கருத்தியல் போருக்கான பிரகடனம் என்றும் குறிப்பிட்டார். இந்த கருத்தியல் போர் இந்தியா எங்கும் எதிரொலிக்கும் வகையில், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஊடகங்கள் அனைத்தும் விவாதிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சரியான நேரத்தில் இந்த சொல்லாடலைப் பயன்படுத்தி இருக்கிறார் என குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த மண்ணில் நீண்ட நெடுங்காலமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் இடையே போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என குறிப்பிட்ட திருமாளவன், அதன் ஒரு அடையாளமாகத்தான் கெளதம புத்தர் விளங்குகிறார் என்றார்.
கெளதம புத்தர் வெறும் மதத்ததை நிறுவியவர் அல்ல என்றும், ஆன்மீகத் தலைவர் அல்ல என்றும் கூறிய திருமாவளவன், அவர் ஆரியத்திற்கு எதிராக கருத்துப் போர் நடத்தியவர் என கூறினார்.
அந்த வகையில், தற்போது பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கை வழியில் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
தோன்றிய நாளில் இருந்தே திமுக குறிவைக்கப்பட்டது:
திமுக தோன்றிய நாளில் இருந்தே பகை சக்திகளால் அது குறிவைக்கப்பட்டது என தெரிவித்த திருமாவளவன், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்கான முயற்சிகள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
ஊழித் தீயைப் போன்று இந்த மண்ணில் தோன்றியவர் பெரியார் என புகழ்ந்துரைத்த திருமாவளவன், அவரை வீழ்த்துவதற்கு சனாதன சக்திகள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை என்றார்.
நல்வாய்ப்பாக பெரியாருக்கு அண்ணா கிடைத்தார் என்றும் அவர் பெரியாரியத்தை செழுமைப்படுத்தினார் என்றும் குறிப்பிட்ட திருமாவளவன், அண்ணாவின் மறைவுக்குப் பிறகு பெரியாரைப் பற்றிப் பேச இனி யாரும் இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்தபோது சுயம்புவாகத் தோன்றியவர் கருணாநிதி என தெரிவித்தார்.
பெரியாரியத்தை அண்ணா செழுமைப்படுத்தினார் என்றும் கருணாநிதி அதனை வலிமைப்படுத்தினார் என்றும் குறிப்பிட்டார் திருமாவளவன்.
தமிழக அரசியலை தன் விரல் நுனியில் சுழற்றியவர் கருணாநிதி:
தமிழக அரசியலின் தலைப்புச் செய்தியாக 50 ஆண்டு காலம் இருந்தவர் கருணாநிதி என குறிப்பிட்ட திருமாவளவன், அவரைப் போல் அதிகம் விமர்சிக்கப்பட்ட தலைவரோ, இழிவுக்கு உள்ளாக்கப்பட்ட தலைவரோ இந்தியாவில் வேறு யாரும் இல்லை என்றார். அந்த அளவுக்கு அவர் தாக்கப்பட்டபோதும், எதைப் பற்றியும் கவலைப் படாமல் நெஞ்சுறுதியோடு நின்றவர் கருணாநிதி என திருமாவளவன் குறிப்பிட்டார்.
அண்ணாவின் கனிவும், பெரியாரின் துணிவும் கொண்ட பெரும் தலைவராக 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழக அரசியலை தன் விரல் நுனியில் வைத்து சுழற்றியவர் கருணாநிதி எனக் கூறிய திருமாவளவன், சக்கர நாற்காலியில் இருந்தபோதும் தமிழக அரசியல் அவரையே சுற்றிவந்தது என்றும், இதற்குக் காரணம் அவர் பெரியாரை வலிமைப்படுத்தியதுதான் என்றும் குறிப்பிட்டார்.
பெரியாரியத்தை முழுமைப்படுத்துங்கள்:
“தம்பி என்ற உணர்வோடு அண்ணன் ஸ்டாலினிடம் நான் முறையிடுகிறேன். பெரியாரியத்தை அண்ணா செழுமைப்படுத்தினார்; கருணாநிதி வலிமைப்படுத்தினார்; நீங்கள் முழுமைப்படுத்த வேண்டும்; அதனை முதன்மைப்படுத்த வேண்டும். திமுக உயிர்ப்போடு இருக்க, வலிமையோடு இருக்க, மீண்டும் ஆட்சி அமைக்க முக்கியக் காரணம் சனாதன எதிர்ப்புதான். எனவே, குறைந்த அளவில் கூட உங்களுக்கு தயக்கம் இருக்கக்கூடாது.
“கருணாநிதிக்குப் பிறகு திமுக அவ்வளவு தான் என்றார்கள். ஆனால், எவரும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள்பட அத்தனை கட்சிகளையும் ஒரே அணியில் சேர்த்த பெருமை, சாதனை உங்களையே சாரும்.
மிகப் பெரிய ஆபத்து நாட்டை சூழ்ந்திருக்கிறது:
“மிகப் பெரிய ஆபத்து நாட்டை சூழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள்(பாஜக) 2023 மகா கும்பமேளாவில் அடுத்த அரசியல் சாசனத்தை அறிவிக்கப் போகிறார்கள். 700 பக்கம் எழுதிவிட்டார்கள். அதில் ஒன்றிரண்டு வெளிவந்துவிட்டது.
“இந்தியாவின் பெயரை இந்து ராஷ்ட்ரம் என அறிவிக்கப் போகிறார்களாம். இந்தியாவின் தலைநகரமாக வாரணாசியை அறிவிக்கப் போகிறார்களாம். இந்திய அரசியல் சாசனமும் ஆட்சி முறையும் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில் இருக்கும் என்கிறார்கள்.
“அப்படி ஒரு அறிவிப்பு வந்துவிட்டால் நாட்டில் பெண்கள் படிக்க முடியாது. அவர்களுக்குச் சொத்துரிமை இருக்காது. வர்ணாசிரம தர்மம்தான் அரசியலமைப்பு என்றாகிவிட்டால் நாட்டை எவராலும் காப்பற்ற முடியாது.
“இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஓட்டுரிமை இருக்காது என்கிறார்கள்.
நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்யுங்கள்:
“இதை தடுப்பதற்கு ஒரே வழி; ஒரே கதி நீங்கள்தான். நாடு முழுவதும் துணிச்சலாகப் பயணம் செய்யுங்கள். நீங்கள் தமிழ்நாட்டுத் தலைவர் அல்ல. தேசியத் தலைவராக உயர்வதற்கு மிகப் பெரிய வாய்ப்பு; சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது. நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்” இவ்வாறு அவர் பேசினார்.







