சொன்னது மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்து தருபவன் இந்த ஸ்டாலின், உங்கள் ஸ்டாலின் என்று ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் சென்னை தீவுத்திடலில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 20,000க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோட்டையை உள்ளடக்கியது தான் இந்த தீவுதிடல். நானும் உங்களில் ஒருவனாக, அந்த உணர்வோடு, பெருமையோடு, மகிழ்ச்சியோடு இந்த மேடையில் நின்று கொண்டு இருக்கிறேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன். அரசும், அரசியலும் ஒன்றோடு ஒன்று கலந்தது. அரசு ஊழியர்கள் மாநாட்டில் அரசியல் பேசாமல் வேறு எங்கே பேசுவது? நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற அரசு ஊழியர்கள் நீங்கள் தான் காரணம்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் உங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்தது உண்மைதான். அதனை நான் மறுக்கவில்லை. திமுக அரசு அதனை நிச்சயம் நிறைவேற்றி தரும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்குவதற்காக மாநில அரசுக்கு இந்த ஆண்டு ரூ.12000 கோடி செலவினம் ஏற்படும். 1.1.2022 முதல் அகவிலைப்படி 18% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.
புதிய மருத்துவ காப்பீடு திட்டம், பொதுத்துறை நிறுவனமான United India insurance corporation மூலம் செயல்படுத்தபடுகிறது. அதன் மூலம் கட்டணமில்லா சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 10,00,000 வரை மருத்துவ காப்பீடு செய்ய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை சார்ந்து வாழக்கூடிய குடும்பம் பயன்பெற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசின் நல திட்டங்களும், பல சேவைகளும் மக்களிடம் சென்று சேர பல்வேறு கட்ட சலுகைகள் சென்று சேர்ந்துள்ளன. சொன்னது மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்து தருபவன் இந்த ஸ்டாலின், உங்கள் ஸ்டாலின். அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்த 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு வரும் போதே உங்கள் கோரிக்கைகளை சிலவற்றை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்து விட்டுதான் வந்துள்ளேன்.
ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் நீண்ட நாள் கோரிக்கையான ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் கோரிக்கைக்காக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகளிர்க்கு இலவச கட்டணமில்லா பேருந்து திட்டத்தின்கீழ் அரசுக்கு 1200 கொடி ரூபாய் வருடத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அரசாங்கத்தின் கருவூலத்தில் பல்லாயிரக்கணக்கான பணம் சேர்க்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம் அல்ல. அரசின் உரிய திட்டங்களை நிறைவேற்றுவதே எங்கள் எண்ணம் என்று கூறினார்.







