நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதியில், குட்டையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவிகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதி சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் ஜனனி. அதே பகுதியில் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ரட்சணாஸ்ரீ. இருவரும் ராசிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் அத்திப்பழகானூர் அருகே உள்ள நத்தமா குட்டையில் 2 மாணவிகளும் வீட்டிற்கு தெரியாமல் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் 2 மாணவிகளும் குட்டையில் மூழ்கி பலியாகினர். குட்டையின் கரையில் துப்பட்டா கிடந்ததை கண்டு சேற்றில் யாரோ மூழ்கி இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் குட்டையில் மூழ்கிய மாணவிகளின் உடலை மீட்டெடுத்தனர்.
மேலும் மாணவி ரட்சணாஸ்ரீ வளர்த்த நாய் மாணவி இறந்த தகவலையடுத்து பொதுமக்களுடன் நாயும் ஓடிவந்து மாணவியின் சடலத்தை விட்டு நகராமல் சோகத்துடன் அமர்ந்திருந்தது. பின்னர் மாணவி சடலத்தை எடுத்து செல்லும் போது பின் தொடர்ந்து வேகமாக ஓடி சென்றது பார்ப்போரைக் கண்கலங்க செய்தது. சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் ஆய்வாளர் சுகவனன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு மாணவிகளின் உடலையும் மீட்ட காவல்துறையினர் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு தோழிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் உள்ளோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






