சென்னையில் ஸ்போர்ட் சிட்டி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி, தனியார் மருத்துவமனை இணைந்து இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் தொடங்கியுள்ள இதயம் சார்ந்த
விழிப்புணர்வு பரப்புரை திட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலக மகளிர் டென்னிஸ் போட்டி வருகின்ற செப்டம்பர் 12 சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் தொடங்க உள்ளது. மேலும் இன்று காலை பத்து மணி முதல் இந்தியாவில் உள்ள வீராங்கனைகளுக்கான தகுதி சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்று நாளையும் நடைபெறும். இதில் தேர்வுபெறும் வீராங்கனைகள் உலக மகளிர் போட்டியில் பங்கேற்பார்கள். இதற்கான பரிசு தொகை மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளோம். அடுத்த கட்டமாக எந்த பகுதியில் எந்த மாதிரியான விளையாட்டு உபகரணங்கள் தேவைப்படுகிறது என்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் விரைவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோப்பைக்கான அறிவிப்பையும் வெளியிட உள்ளார்’ என்று கூறினார்.
மேலும், சென்னையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதற்கான பணிகளும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் தகுதியானதாக இல்லாததால் புதிய இடங்களை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது எனக் கூறினார். அதேபோல நான்கு ஒலிம்பியாட் அகாடமி அமைப்பதற்கான இடங்களும் அதற்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.







