23-வது பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 64 ஆண்டுகளில் ஃபிஃபா உலகக் கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் முதல் அணி என்ற அர்ஜென்டினாவின் கனவை ஸ்பெயின் தகர்த்தது.
இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடனான தோல்விக்கு பின் அர்ஜெண்டின நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மைதானத்தில் உடைந்து அழுதார். மேலும் அங்கு அர்ஜெண்டின ரசிகர்களும் சோகமாக காட்சியளித்தனர்.
இந்த நிலையில் மெஸ்ஸி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இந்த வலி மிகவும் கடுமையானது; இந்தத் துயரத்தை மறப்பது எனக்குக் கடினமாக இருக்கும். ஆனாலும், இதில் உள்ள நல்ல விஷயங்களையும் நான் நினைவில் கொள்வேன். ஆட்டங்களின் மூலம் நாங்கள் அனைத்தையும் மாற்றியமைத்த விதம், ஒட்டுமொத்த நாட்டின் ஆதரவு மற்றும் இந்த அணியின் கடின உழைப்பு ஆகியவை எங்களை மீண்டும் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக உயர்த்தின; இவை அனைத்தும் என்றென்றும் என் நினைவில் நிலைத்திருக்கும்.
நாங்கள் சாதித்ததை இன்று மதிப்பிடுவது கடினம் என்றாலும், இந்த அணி தொடர்ந்து இரண்டு முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியுள்ளது என்பதைச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வாழ்த்துக்கும், ஒவ்வொரு செய்திக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாடாக மீண்டும் ஒன்றிணைந்து, அர்ஜென்டினராக இருப்பதில் உள்ள அளப்பரிய பெருமையை நாம் அனைவரும் பகிர்ந்துகொண்டோம்.
சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.




