தனுஷ் நடித்து இன்று வெளியான வாத்தி திரைப்படம் எப்படி உள்ளது..? என்ன கதையை இப்படம் பேசுகிறது..? விரிவாக அலசலாம்.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. சிவகார்த்திகேயன், விஜய்க்கு பிறகு தனுஷும் தெலுங்கு இயக்குநருடன் இணைந்த முதல் படம் வாத்தி. தமிழில் வாத்தி எனவும் தெலுங்கில் சார் எனவும் இப்படம் வெளியாகி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
90-களில் தனியார்மயமாக்கலால் மருத்துவம், பொறியியல் போன்ற கல்வி நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே பள்ளியில் படிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவராக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
இதனையும் படியுங்கள்: சிவகார்த்திகேயனின் உதவும் உள்ளம்… நெகிழ்ந்த “கத்துக்குட்டி” இயக்குநர்
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்குகின்றனர். தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுக்க கட்டண ஒழுங்குமுறை சட்டத்தை அரசு கொண்டு வர முயற்சி செய்கிறது. இந்த சட்டம் நிறைவேறினால் தங்களுக்கு பிரச்னை வரும் என்பதை உணர்ந்த சமுத்திரகனி அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து நல்ல கல்வி கொடுக்கப்படும் என அறிவிக்கிறார். நல்ல ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு அனுப்புவதாக சொல்லி மூன்றாம் தர ஆசிரியர்களை அங்கு அனுப்புகின்றனர். அப்படி தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு செல்லும் தனுஷ் அனைவருக்கும் கல்வி போய் சேர வேண்டும் என நினைக்கிறார்.
ஆசிரியராக தனுஷ் சாதித்தாரா? சமுத்திரக்கனியின் திட்டம் நிறைவேறியாதா? என்பது தான் வாத்தி படத்தின் மீதிக் கதை. வாத்தி படத்தின் மொத்த கதையையும் தனி ஒருவராக தனுஷ் தன் தோள் மீது சுமந்து சென்றுள்ளார். காதல் காட்சிகள், ஆக்சன், வசனம் என ஒட்டு மொத்தமாக நடிப்பு அசுரனை போல தனுஷ் கலக்கி உள்ளார்.
தனுஷுக்கு நடிப்பு சொல்லி கொடுக்க வேண்டுமா என்ன? என்பதை போல எல்லா காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். அசுரன் படத்தின் இறுதிக் காட்சியில் தனுஷ் பேசும் வசனங்கள் தான் இந்த படத்தின் மொத்த கதை என்று கூட சொல்லலாம். முதல் பாதியில் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளை, கல்வி, சீர்திருத்தம் எனவும் இரண்டாம் பாதியில் கல்வி எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் புரிய வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் வெங்கி அட்லுரி.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் எடுக்கப்பட்டதால் சில இடங்களில் வசனங்கள் தெலுங்கில் வருகின்றன. அதே நேரத்தில் காட்சி அமைப்புகளும், அங்கு வாழும் மக்களும் நமக்கு சற்று வித்தியாசமாக தெரிவதால் தெலுங்கு படத்தை பார்த்த உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.
அப்பா, சாட்டை போன்ற படங்களில் கல்வி தொடர்பாக சமுத்திரகனி எதை எல்லாம் பேசினாரோ அது எல்லாம் இல்லை என்பதை போல சமுத்திரகனியே பேசுவது சிறப்பு. ஆனால் வில்லத்தனம் நிறைந்த சமுத்திரகனியை இன்னும் அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது. நாயகி சம்யுக்தா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை பெரிதாக பயன்படுத்தவில்லை. வா வாத்தி பாடல் மற்றும் காதல் காட்சிகளுக்கு தான் அவரை பயன்படுத்தி உள்ளனர்.
படத்தின் வசனங்கள் ஆங்காங்கே ரசிக்க வைக்கின்றன. அதிலும் சாதி குறித்து தனுஷ் பேசும் வசனங்கள் சிறப்பு. ஜி.வி.பிரகாஷின் பின்னனி இசை பெரிதாக நம்மை கவரவில்லை என்றாலும் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக வா வாத்தி பாடல்கள் அதிகம் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வாத்தி திரைப்படம் மீண்டும் நமக்கு பாடம் எடுக்க முயற்சி செய்துள்ளது.