நடிகர் சிவகார்த்திகேயனின் உதவும் உள்ளத்தை பார்த்து தான் நெகிழ்ந்து போனதாக கத்துகுட்டி மற்றும் உடன்பிறப்பு பட இயக்குநர் இரா.சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
கத்துகுட்டி மற்றும் உடன்பிறப்பு போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“சினிமா சம்பந்தப்பட்ட ஓர் ஆளுமைக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசரமாக அறுவை சிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்டது. அவர் பணியாற்றும் நிறுவனத்தினர் ஒருபுறம் , நண்பர்கள் நாங்கள் மறுபுறம் என பணத்தை புரட்ட திண்டாடினோம். அ.வினோத் ஒரு லட்சம் கொடுத்தார். மற்றவர்களும் கொடுத்தார்கள். ஆனாலும், திரட்டிய தொகை போதவில்லை. “சார், நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டுப் பார்க்குறீங்களா?” என என்னிடம் ஒருவர் சொல்ல, நான் சட்டென மறுத்துவிட்டேன்.
காரணம், நான் சிவாவிடம் நிறைய கேட்டுவிட்டேன். அவரும் மறுக்காமல் செய்து கொண்டே இருக்கிறார். முடியாது என அவர் சொன்னதே இல்லை. அதற்காக எல்லாவற்றுக்கும் அவரிடம் போய் நிற்பது எனக்கு நியாயமாகப்படவில்லை.
இரண்டு நாட்கள் கழித்தும் போதிய தொகையைத் திரட்ட முடியாத நிலையில், வேறு வழியே இல்லாமல் விஷயத்தை சிவகார்த்திகேயனிடம் சொன்னேன் “நான் பார்த்துக்குறேன். தொகை முழுவதையும் நான் கட்டுறேன். என் பங்களிப்பை அவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எல்லோரும் சேர்ந்து அவருக்காக நிற்பதாகவே இருக்கட்டும்.” என சிவகார்த்திகேயன் சொன்னார்.
“திரட்டிய தொகை கையில் இருக்கிறது. தேவைப்படும் தொகையை மட்டும் மருத்துவமனைக்குக் கொடுத்தால் போதும் என வற்புறுத்திச் சொன்னேன். “அவர் ரொம்ப முக்கியமான ஆள். மருத்துவமனையில் பேசி அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் செஞ்சு கொடுங்க…” என தம்பி நவநீதனை அழைத்து சிவகார்த்திகேயன் சொன்னார்.
அவர் காட்டிய அக்கறை அந்த உதவியைவிட மேலானது. சிகிச்சை பெற்று வரும் அந்த சினிமா ஆளுமையிடம் சிவாவின் வார்த்தைகளை அப்படியே சொன்னேன். குலுங்கி அழத் தொடங்கிவிட்டார். “என்னை இந்தளவுக்கு நினைவு வைச்சிருக்காரே…” என நெகிழ்ந்து போனார். சிவகார்த்திகேயன் போன்றவர்கள் உற்ற துணையாக நிற்பதுதான் அவருக்குப் பெரிய ஆறுதல்.
இதனையும் படியுங்கள் : எதிர்நீச்சல் போட்டு கனவை வென்ற ‘நம்ம வீட்டு பிள்ளை’
நெல் ஜெயராமன் தொடங்கி நீட் பயிற்சிக்குப் போராடிய பூக்கொல்லை சகானா வரை எத்தனையோ பேருக்கு சிவகார்த்திகேயன் உதவி இருக்கிறார். பேருக்கு உதவினோம் என்றில்லாமல், தொடர்ந்து அவர்கள் குறித்து விசாரிப்பதும் மேற்கொண்டு உதவுவதுமாக சிவா காட்டும் அக்கறை உண்மையானது; பரிபூரணமானது.
நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை இன்றளவும் ஏற்று வருகிறார் சிவா. இன்னும் பட்டியலிட நிறைய இருக்கின்றன. எதையும் பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல் எல்லாமும் செய்யும் அன்புத்தம்பி சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..” என கத்துகுட்டி இயக்குநர் நெகிழ்ச்சியோடு தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
– யாழன்