மக்களுக்காக தன் சக்தியையும் மீறி உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆத்தூரில் நடைபெற்ற திமுகவின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் இறுதியாக பேசிய முதலமைச்சர், “முதலமைச்சராக பதவி ஏற்றபோது எனக்கு தயக்கம் இருந்தது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அனைத்து துறையும் அதள பாதளத்திற்கு சென்றுவிட்டது. தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் கவலைப்படும்படியாக இருந்தது. தமிழகத்தை தலைநிமிர வைப்பது கடுமையாக இருந்தது. துவண்டு கிடந்த தமிழ்நாடு தற்போது துள்ளி எழுந்திருக்கிறது. தமிழகம் தற்போது தலை நிமிர்ந்து நிற்கிறது என்பதை தலைநிமிர்ந்து சொல்வேன்” என்றார்.
கடந்த தேர்தலில் திமுக தோற்ற தொகுதியாக இருந்தாலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றேன். தேர்தல் முடிந்தாலும் 234 தொகுதிகளும் என் தொகுதியாக பார்க்கின்றேன். ஆட்சி என்பது எல்லாருக்கும் பொதுவானது என்று கூறிய முதலமைச்சர், “மதத்தின் பெயரில் ஆட்சிக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகின்றனர். யாருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. என்னுடைய இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன், நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை” என்றும் கூறினார்.
தொடர்ந்து, “மாநில அரசின் முழு வரியையும் சுரண்டி தின்றுவிட்டது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ 21, 760 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. திமுகவுக்கு எதிராக எத்தனை விஷப் பரப்புரை செய்தாலும் ஒருபோதும் வீழ்த்த முடியாது. இல்லாததை கட்டவிழ்த்து பார்க்கும் பலருக்கு இருப்பதை கண்திறந்து பார்க்க முடியவில்லை.
தொழில் வளர்ச்சி, சமூக வளர்ச்சி, கல்வி வளர்ச்சி உள்ளிட்டவை அடங்கியதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் யாரையும் பிரிக்காது, ஒன்று சேர்க்கும். தற்போது நடப்பது ஒரு கட்சியின் அரசு அல்ல ஒரு இனத்தின் அரசு. மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன்” என்றார் முதலமைச்சர்.







