துபாய், அபுதாபி பயணம் மகத்தான பயணம், வெற்றிப் பயணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 24-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். தொடர்ந்து, அபுதாபியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடல் கடந்து சென்று, கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி துபாய், அபுதாபியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு 6,100 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் ஒப்பந்தமாகி உள்ளன.
இந்நிலையில், ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாலை 2.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் துரைமுருகன், கே.என்.நேரு, சி.வி.கணேசன், பொன்முடி, ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், டிஜிபி சைலேந்திர பாபு, மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர்.
அண்மைச் செய்தி: “துபாய்க்கு பணத்தை எடுத்து வந்தேனா? முதலமைச்சர்”
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய், அபுதாபி பயணம் மகத்தான பயணம், வெற்றிப் பயணம் எனக் கூறினார். 6 நிறுவனங்களுடன் 800 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன எனவும் அடுத்த சில மாதங்களில் மேலும் சில ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளதாகவும் கூறினார். இதன் மூலம் 14,700 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் எனத் தெரிவித்த அவர் பயணம் குறித்து எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் பற்றி கவலையில்லை என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







