தமிழ்நாடு சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கியது.
இந்த நிலையில் இன்று காலை அவை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார். இதனையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசினார். அப்போது, “கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெறுவது பல ஆண்டுகளாக சவால்களாக உள்ளது. கர்நாடகா முதலமைச்சரை சந்திக்க முதலமைச்சர் கால அவகாசம் கேட்டு பெங்களூரில் இந்த தேதியில் 3.8.2026 முடிவு செய்யப்பட்டது. பிறகு இந்த தேதியில் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
காவிரி விவகாரத்தில் இந்த அரசு சமரசம் செய்து கொள்ளாது, சட்ட ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து, இனியும் அதே முயற்சியுடன் மேற்கொள்ளும் தொடர்பாகவும் பல கடிதங்கள் வாயிலாக முதலமைச்சர் பிரதமரை வலியுறுத்தி உள்ளார். சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் பூமி பூஜை கொடுக்க எந்த ஒரு அனுமதியும் வழங்கக்கூடாது என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன், மற்றும் காவிரி உரிமையை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.




