“மேகதாது அணை கட்டினால் இயற்கை வளங்கள் முழுவதும் அழிந்து விடும்” – சௌமியா அன்புமணி!

கர்நாடகாவில் தேக்கி வைக்க முடியாத உபரி நீர் தான் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்று சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை அவை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார். இதனையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசினார். அப்போது, “கர்நாடகா அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை முறையாக கொடுக்கவில்லை. கர்நாடகாவில் தேக்கி வைக்க முடியாத உபரி நீர் தான் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம்.

தமிழகத்திற்கு ஒரு துளி தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்பதற்காக தான் அவர்கள் இந்த அணையை கட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள். தமிழகத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் அளவில் தான் இந்த அணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அணை கட்டினால் வன விலங்குகள் மட்டுமல்லாமல், இயற்கை வளங்கள் முழுவதும் அழிந்து விடும். பல்வேறு வழக்குகள் முன்வைத்து இந்த அணை கட்டுவதற்கு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.