கோழி என்றால் நமது நினைவுக்கு முதலில் வருவது, 90-ஸ் கிட்ஸ் ஆக சிறு வயதில் 10 ரூபாய்க்கு வாங்கி வளர்க்க தெரியாமல் வீணடித்த கலர் கோழி குஞ்சுகள் தான். இதுவே 2K கிட்ஸ் ஆக இருந்தால் கிரில் சிக்கனும், கெபாபுகலுமே நினைவுக்கு வரும்.
“உனக்கும் எனக்கும்” திரைப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு கோழி மீது இருந்த அலாதி பிரியமும், ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷின் சேவல் சண்டை காட்சிகளும் நமது மனதில் நீங்கா இடம் பிடித்தவை. இந்த வரிசையில் இங்கு ஒரு கோழிக்கு 20 வயது.. கேட்டால் நம்பமுடிகிறதா. அதை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
பொதுவாக கோழிகளின் ஆயுட்காலம் பரவலாக மாறுபடும், சராசரியாக 5-10 ஆண்டுகள். இதுவரை பழமையான கோழி எது என பார்த்தால், 1989 ஆண்டு பிறந்து 2012 வரை அதாவது 23 ஆண்டுகள் 152 நாட்கள் வாழ்ந்த ரெட் குயில் மஃப்ட் அமெரிக்கன் கேம் (Red Quill Muffed American Game) எனும் ரகத்தை சார்ந்த மஃபி (MUFFY) எனப்படும் கோழியாகும்.
2002ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 6 முட்டைகளை இட்டு, முட்டை பொறிப்பதற்கு முன்னதாகவே நமது சூப்பர் கோழியான பீனட்டின் தாய், மற்ற முட்டைகளையும் விட்டு விட்டு சென்றுவிட்டது. தற்செயலாக அந்த பக்கம் சென்ற மார்ஸி எனும் பெண், அந்த முட்டைகளை எடுத்து குப்பையில் போடும் போது ஒரு அழகான கோழி குஞ்சின் குரல் கேட்டுள்ளது. ஓடி சென்று அதை கையில் எடுத்த மார்ஸி, முட்டையிலிருந்து அந்த கோழி குஞ்சை எடுத்து, சுத்தம் செய்து கூண்டுக்குள் வைத்து வளர்த்து வந்துள்ளார்.
பீனட்டின் தாய் புதிதாக பிறந்த குஞ்சுகளை ஏற்க மறுக்கவே, முதல் இரண்டு ஆண்டுகள், பீனட் மார்சியின் சாப்பாட்டு அறையில் ஒரு கிளி கூண்டில் வசித்து வந்தது. பீனட் சராசரியை விட இரண்டு ஆண்டுகள் அதிகமாக எட்டு வயது வரை முட்டையிட்டது, மேலும் பல பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகளுடன் பீனட் கோழி வாழ்ந்து வருகிறது
பீனட் இப்போது முட்டை இட இயலாதவளாக இருந்தாலும், இளமையில் அவளுக்கு ”லான்ஸ்” என்ற ஒரு சேவல், காதலனாக இருந்தான். பீனட் இங்கு வசிப்பதின் காரணமாக OAP (old-age poultry), வயதான கோழி பண்ணை எனும் சான்றானது மார்ஸியின் பண்ணைக்கு வழங்கப்பட்டுள்ளது. பீனட் இப்போது குளிர்காலத்தை வீட்டிற்குள் தனது 15 வயது மகள் மில்லியுடன் கழிக்கிறது.
தினமும் சாப்பிட்டு விட்டு தூங்குவதே பீனட்டின் ஒரே வேளை, பீனட்டும், மில்லியும் மார்ஸியின் மடியில் தினமும் அமர்ந்து ஒன்றாக டிவி பார்த்து மகிழ்கின்றனர். ஒரு கோழியை நீண்ட காலம் வளர்ப்பதற்கான மார்ஸியின் அறிவுரை என்னவென்றால், போதுமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, தயிரில் நொறுக்கப்பட்ட வைட்டமின் டி மாத்திரைகளை சேர்த்து, பழங்கள், காய்கறிகளுடன் உணவளிக்க வேண்டும். புழுக்களை எதிர்த்துப் போராட ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து, சுத்தமான தண்ணீரை குடிக்க வைக்க வேண்டும்.
பீன்னட்டின் 21வது பிறந்தநாள் விரைவில் நெருங்கி வருவதால், அதுவே பழமையான கோழியாக கொண்டாடப்பட இருக்கிறது. தற்பொழுது பீனட் கோழியானது கின்னஸ் உலக சாதனை பட்டியலில், உலகின் அதிக காலம் வாழ்ந்த கோழி எனும் சாதனை படைத்துள்ளது.












