என்னுடைய திரைப்படங்களில் நடிக்கும் ஹீரோக்கள், புகைபிடிப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் இதுவரை நான் காண்பித்ததில்லை என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில், போதை விழிப்புணர்வு குறித்த குறும்பட போட்டி நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி, வளர்ந்துவரும் இளம் இயக்குனர்கள் மற்றும் சினிமா ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் சிவன், “இது போன்ற குறும்படங்களில் பங்கேற்று தான், இன்று இயக்குனராக பணியாற்றுவதற்கு தேவையான அனுபவம் எனக்கு கிடைத்தது. எனவே வளர்ந்து வரும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நானும் காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். எலக்ட்ரானிக் மீடியா பாடத்தை தேர்வு செய்து படித்தேன்.
போதைப் பொருட்களினால் ஏற்படும் அபாயங்களையும் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் பல்வேறு திரைப்படங்கள் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். போட்டியாளர்கள் எடுக்கும் குறும்படத்தின் வாயிலாக போதை பொருட்களை உபயோகிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி. ’நானும் ரவுடி தான்’ திரைப்படம் பாண்டிச்சேரியில் எடுக்கப்பட்ட போதும் அதில் ஹீரோ ஒருமுறை கூட மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சியை நான் படமாக்கவில்லை.
என்னுடைய திரைப்படங்களில் நடிக்கும் ஹீரோக்கள், புகை பிடிப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் இதுவரை நான் காண்பித்ததில்லை. இதைப் பற்றி சென்சார் போர்டில் கூட என்னிடம் வியப்பாக கேள்வி எழுப்பினர். மற்ற இயக்குனர்களும் அவரவர்களுடைய வழியில் சமூக அக்கறையோடு காட்சிகளை அமைப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.