திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையத்தில் ஒரே தெருவில் உள்ள நான்கு வீடுகளில் புகுந்து 25 சவரன் தங்க நகை, ரூ.3 லட்ச ம் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ளது அம்மாபாளையம் கிராமம். இங்குள்ள கொங்கராம்பட்டு சாலையிலுள்ள கொள்ளைமேடு பகுதியில் ஒரே தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு ஆளில்லாத நேரம் பார்த்து வந்த திருடர்கள் முதலில் சரிதா என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 20சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
மேலும் அதோடு நிற்காமல் அடுத்தடுத்த வீடுகளான சிட்டாக்கு மற்றும் மேலும் இருவரின் வீடுகளில் புகுந்து 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடி உள்ளனர்.
மேலும் திருடும் போது வீட்டு உரிமையாளர் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் யாரும் உதவிக்கு வரக்கூடாது என்பதற்காக தெருவிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் வெளிப்புற பூட்டை போட்டுவிட்டு திருடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களின் இந்த நூதன செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேந்தன்







