கோவையில் கனமழை பெய்ததால் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற வட்ட வழங்கல் அலுவலர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
கோவை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நேரத்தில் பரவலாக கன மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சாலை மேடும்பள்ளமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஒரு வழி போக்குவரத்து மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருச்சி சாலை நோக்கி செல்லும் பாதை மட்டுமே போக்குவரத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக சாலை ஓரத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கட்டடத்திற்கு செல்ல முயன்ற போது இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதில் ஒருவர் தப்பித்து விட்டார். மற்றொருவர் சாலையில் உள்ள பள்ளத்தில் கால் சிக்கியதால் அங்கேயே கீழே விழுந்துள்ளார்.
இதனால் தொடர்ந்து அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். மற்றொருவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வரும் செல்வராஜ் என்பது தெரியவந்துள்ளது.







