திருப்பூரில் போலி மருத்துவர் கைது!

திருப்பூரில் மருத்துவம் படிக்காமல் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காட்டில் செயல்பட்டு வரும் இஷ்வந்த் என்ற கிளினிக் முறைகேடாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர்…

திருப்பூரில் மருத்துவம் படிக்காமல் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காட்டில் செயல்பட்டு வரும் இஷ்வந்த் என்ற கிளினிக் முறைகேடாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வினீத்திற்கு புகார் வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் கடந்த 13-ந் தேதி இஷ்வந்த் கிளினிக்கில் ஆய்வு
மேற்கொண்டனர்.

அப்போது கடந்த 2019-ம் ஆண்டு கிளினிக் ஆனது ஒருவரின் பெயரில் உரிமம் பெறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த உரிமத்தை அண்ணாத்துரை என்பவர்
பயன்படுத்தி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அண்ணாத்துரை என்பவர் ஆயுர்வேத மருத்துவம்
படித்துவிட்டு, அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து உரிய அனுமதி பெறாமல் முறைகேடாக செயல்பட்ட கிளினீக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுபோல் அண்ணாத்துரை என்பவர் ஆயுர்வேத மருத்துவம் படித்துள்ளதாக தெரிவித்த நிலையில், அவரது படிப்பு சான்றிதழ்களுடன் மாவட்ட சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் ஆஜராகும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி சுகாதாரத்துறை அலுவலகத்தில் அண்ணாத்துரை ஆஜராகினார். அப்போது அவரது மருத்துவ சான்றிதழை ஆய்வு செய்த போது, ஆயுர்வேதம் படித்ததாக அவர் தெரிவித்தது போலி என்பது தெரியவந்தது. அண்ணாத்துரை சமர்ப்பித்த சான்றுகள் அனைத்தும் தமிழ்நாடு சித்த மருத்துவ கழகத்தில் பதிவு செய்ய இயலாதது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் அண்ணாத்துரையை கைது செய்தனர்.

—–ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.