கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சித்தராமையா நடைபெறவுள்ள கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தேர்தல் அரசியலிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி என்றாலும், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கணிசமாக வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன. கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் மொத்த 224 இடங்கள் உள்ளன. இதில், 113 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 13 ஆம் தேதி, இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் பல்வேறு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. அண்மைக் காலமாக சீட் தராத அதிருப்தியில் பல தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும், பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். அவ்வாறு இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு, ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியைக் காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.
பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்து வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும் கர்நாடகா காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, மைசூருவின் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர், நடைபெறவுள்ள கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தேர்தல் அரசியலிலிருந்து விலகுவேன் என அறிவித்தார்.