விழியிலா மாந்தர் யார் என்பது பற்றி திருமந்திரத்தில் திருமூலர் கூறியிருப்பதைப் பற்றிப் பார்ப்போம்.
நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம் என்ற தலைப்பின் கீழ், திருமூலரின் திருமந்திரத்தின் சிறப்புகளை படித்துணர்ந்து வருகிறோம். அந்த வகையில் இளமை நிலையாமை என்ற தலைப்பின் கீழ் அவருடைய பாடல் ஒன்றைப் பார்ப்போம்…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழியிலா மாந்தர்?
“கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே”. ( 221. திருமந்திரம்)
பொருளுரை – நாள்தொறும் கிழக்கே தோன்கின்ற பகலவன் மெல்ல மெல்ல உச்சிக்கு ஏறிவந்து அதுபோலவே கீழிறங்கி மேற்கே மறைகிறான். இங்ஙனம் மறைவதை ஒவ்வொரு நாளும் பார்த்திருந்தும் அகக் கண்ணாகிய திருவடியுணர்விலார் தமக்கும் இந் நிலைமை வரும் என்று எண்ணார். இளங்கன்றானது ஆண்டுகள் செல்லச் செல்ல முதிர்ந்து சில ஆண்டுகளில் எருதாய் ஆகின்றது. பின் இறந்து படுகின்றது. அவர்கள் இவ்வுண்மையினையும் கண்டு தெளியார்.
பகலவன் நின்றாங்கு நிற்ப நில உருண்டை அப் பகலவனைச் சூழ்ந்து உருண்டு வருகின்றது. அதனால் பகலவன் எழுந்து மறைவதுபோல் காணப்படுகின்றது. கீழும் மேலுமாகச் சுழன்று வரும் இராட்டையில் நாம் ஏறியிருந்து ஒரு பக்கம் ஓரிடத்து ஒரு பொருளைக் குறிப்பாக வைப்பித்து அதனை நோக்கிக் கொண்டே வந்தால் நாம் மேலே இருக்கும் போது அது கீழிருப்பதாகத் தோன்றும். நாம் அதன் வழிக் கீழ் வர வர அப் பொருள் மேலெழுவதாய்த் தோன்றும். நாம் அதன் கீழ்ப்பக்கஞ் செல்ல அது முற்றாக மறைந்துவிடும்.
-நீலாபிள்ளை