“சிறிது நாட்களுக்கு முன்னால் என்னை வரவிடாமல் கதவை பூட்டுப் போட்டு சாவியை தூக்கிவிட்டு போயிவிட்டார்கள். உனக்கு சினிமாவில் நடிக்க தகுதியே இல்லை என்று சொன்னார்கள்” என நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, கங்கனா ரணாவத் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இப்படம் விநாயகர் சதுர்த்தியை(செப்.15) அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இதில் படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்த வடிவேலு பேசியதாவது:
”ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும்போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை.
முதலில் ஒரு விஷயத்தை சொல்லிவிடுகிறேன். சிறிது நாட்களுக்கு முன்பு என்னை வரவிடாமல் கதவைப் பூட்டுப் போட்டு சாவியை தூக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். உனக்கு சினிமாவில் நடிக்க தகுதியே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதுக்கு என்ன காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவியை கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் சுபாஷ்கரன்.
சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்கிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.







