மதுரை ரயில் தீ விபத்து – உயிரிழந்தவர்களின் உடல்களை விமானம் மூலம் லக்னோ கொண்டு செல்ல ஏற்பாடு!

மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமானம் மூலம் லக்னோ கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில், யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் இன்று அதிகாலை…

மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமானம் மூலம் லக்னோ கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில், யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயிலில் பயணம் செய்த 63 பேரில், 20 பேர் படுகாயமடைந்த நிலையில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் முழு விபரங்கள்

1) பரமேஸ்வர் தயால் குப்தா (57 வயது, ஆண்)

2) மிதிலேஷ் குமாரி (வயது 52, பெண்)

3) ஹேமானி பன்ஷால் (22 வயது, பெண்)

4) சாந்தி தேவி வர்மா (67 வயது, பெண்)

5) அங்குல் ஹஷ்யம் (36 வயது, ஆண்)

6) மனோரமா அகர்வால் (81 வயது, பெண்)

7) சத்ரூ தமன் சிங் (வயது 65 ஆண்)

8) தீபக் கசியம் (வயது 20, ஆண்)

9) ஹரிஸ் குமார் பாஸிம் (வயது 60, ஆண்)

இந்நிலையில், சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது. தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்ய லக்னெள காவல் துறைக்கு தெற்கு ரயில்வே தகவல் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், ரயில்வே விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் விமான மூலம் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்படுள்ளது. மதுரை ரயில் விபத்தில் உயிர் தப்பிய பயணிகளை மீட்கப்பட்டு தனியார் ஹோட்டலில் தங்க தங்க வைக்கபட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் நாளை மதுரையிலிருந்து நேரடியாக லக்னோ விற்கு விமான மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மதுரையிலிருந்து சென்னைக்கு 3 ஆம்புலன்ஸ் வழியாக சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்படுகிறது. நாளை காலை சென்னையில் இருந்து லக்னோவிற்கு விமானம் மூலம் உடல்கள் கொண்டு செல்லப்படுகின்றன. லக்னோ வரை உடல்கள் கொண்டு செல்லப்படுவதால் உடற்கூறாய்வு செய்யப்பட்ட 9 உடல்களும் பதப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.