இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய நகைச்சுவை நடிகர் பாலா – மேளதாளத்துடன் வரவேற்ற மலை கிராம மக்கள்!

100 ஆண்டுகளுக்கு பின்பு ஆம்புலன்ஸ் வசதி பெற்ற பழங்குடியினர் மலை கிராம மக்கள், நடிகர் பாலா அளித்த ஆம்புலன்ஸை மேளதாளத்துடன் வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள குன்றி மலைக்கிராமத்தில் கோவிலூர்,…

100 ஆண்டுகளுக்கு பின்பு ஆம்புலன்ஸ் வசதி பெற்ற பழங்குடியினர் மலை கிராம மக்கள், நடிகர் பாலா அளித்த ஆம்புலன்ஸை மேளதாளத்துடன் வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள குன்றி மலைக்கிராமத்தில் கோவிலூர், கீலூர், இந்திரா நகர், ரோலன்ஸ் நகர், பெரிய குன்றி, சின்ன குன்றி, புளியமரத்தொட்டி, குஜ்சம்பாளையம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலைக்குக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களில் வன விலங்குகள் நடமாட்டம் மற்றும் தாக்குதல் அதிகமாக இருக்கும். மேலும் அங்கு வசிக்கும் பெண்களை மகப்பேறு அவசர காலங்களில் கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்ல கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை வாடகை வண்டிகளை பயன்படுத்தி வந்தனர்.

மலை கிராம மக்களின் இந்த நிலையை அறிந்த தன்னார்வ அமைப்பினர், காமெடி நடிகர் பாலாவிடம் இதுகுறித்து கூறினர். இதனைதொடர்ந்து 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடிகர் பாலா வழங்கினார். இந்த சேவையை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திலிருந்து குன்றி ஊராட்சிக்கு வழங்க கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடக்க விழா பெற்றது.

இதனையடுத்து குன்றி மலைகிராமத்திற்கு நடிகர் பாலா வழங்கிய இலவச ஆம்புலன்ஸை தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் (உணர்வுகள் அமைப்பு) மக்கள் ராஜன் மூலமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கள இயக்குனர் (பொறுப்பு) சுதாகர், கடம்பூர் ரேஞ்சர் ரவிச்சந்திரன் குன்றி ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ் ஆகியோர் முன்னிலையில், குன்றி மலை கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குன்றி மலைகிராம மக்கள் தங்களின் பாரம்பரிய முறைப்படி (பீனாச்சி வாத்தியம், தார தப்பட்டை) இசையடித்து ஆம்புலன்ஸை வரவேற்றனர். ஆம்புலன்ஸ்-க்கு ஓட்டுநர் பொறுப்பு மற்றும் பராமரிப்பு செலவினங்களை உணர்வுகள் அமைப்பு சார்பில் குன்றி பகுதியிலேயே ஒரு நபரை நியமித்து ஏற்பாடு செய்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மக்கள் ராஜன் தெரிவித்தார்.மேலும், குன்றியில் உள்ள தனியார் மொபைல் நிறுவன உரிமையாளர் நெளபல் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மலை கிராம மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் செல்போன் ஒன்றை இலவச வழங்கினார். 100 ஆண்டுகளுக்க மேலாக அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் சேவை இல்லாமல் தவித்து வந்த மலைக்கிராம மக்களுக்கு இந்த ஆம்புலன்ஸ் உதவி மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது

இதன் மூலம் மலைக்கிராமங்களில் மகப்பேறு, வனவிலங்குகள் தாக்குதல் உள்ளிட்ட நேரங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என மலைக்கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். குன்றி பகுதியில் ஒப்படைக்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் சேவை இன்று முதல் துவங்கும் என்று தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.