கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியுடன் நல்ல உறவை கொண்டுள்ளோம், ஆனால் அவரை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையில் நாங்கள் இல்லை என பார்சிலோனா கால்பந்து கழகத்தின் தலைவர் ஜோன் லபோர்டா தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவில் பிறந்த 35 வயதான உலக கால்பந்தாட்ட சாம்பியனான லியோனல் மெஸ்ஸி தற்போது பாரிஸ் செயின்ட் – ஜெர்மைன் கால்பந்து கழகத்தில் இணைந்து விளையாடி வருகிறார். இந்த கழகத்தோடு இரண்டாண்டு ஒப்பந்தமிடப்பட்டு விளையாடி வரும் மெஸ்ஸி, இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் அவரது ஒப்பந்தத்தை முடிக்க உள்ளார். ஒப்பந்தம் முடிந்தவுடன் மெஸ்ஸி தனது வழக்கமான அணியான பார்சிலோனாவில் மீண்டும் இணைவார் என்று பார்சிலோனா ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்தனர்.
இது தவிர சர்வதேச கால்பந்து வர்ணனையாளர்களும், மெஸ்ஸி பிரபல பார்சிலோனா கால்பந்து அணியுடன் ஒப்பந்தம் செய்ய தயாராகி வருவதாக தெரிவித்தனர். மேலும் பார்சிலோனா கால்பந்து கழகத்தின் சார்பில் மெஸ்யிடம் சம்மதம் பெற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக அவருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் பார்சிலோனா கால்பந்து கழகத்தின் தலைவர் ஜோன் லபோர்டா, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அவை உண்மை இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். அந்த பேட்டியில், அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியுடன் நாங்கள் நல்ல உறவை மீண்டும் ஏற்படுத்தியுள்ளோம். மெஸ்ஸியின் தொலைபேசி மூலமாக உரையாடல் ஒன்றை அனுப்பினோம். அந்த உரையாடல் அன்பாகவும் இனிமையாகவும் இருந்தது என்பதே உண்மை. நாங்கள் ஒருவரையொருவர் பல வருடங்களாக அறிவோம். எங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருக்கிறது. நாங்கள் லியோனல் மெஸ்ஸியை மிகவும் நேசிக்கிறோம்.
ஆனால் அவரை தற்போது எங்களது கழகத்திற்கு அழைத்து வரும் எந்த திட்டமும் எங்களிடம் இல்லை. காரணம் எங்களது கழகம் தற்போது சிக்கன திட்டத்தை கையாண்டுள்ளது. அப்படியிருக்கும் பொழுது அதிக விலை கொடுத்து மெஸ்ஸியை வாங்கும் நிலையில் நாங்கள் இல்லை. அவர் மிகப்பெரிய திறமையான் பிளேயர். அவரை பெரிய பெரிய நிறுவனங்கள் போட்டிபோட்டு வாங்குவார்கள். எர்னு லபோர்டா கூறினார்.
லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா கழகம் தனக்கு தகுதியானதை கொடுக்கவில்லை என கூறி 2021ம் ஆண்டு பார்சிலோனாவை விட்டு அவர் வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா









