“பாஜக – அதிமுக இடையே கனவிலும் பிரச்னை வராது” – நயினார் நாகேந்திரன் பேட்டி

அதிமுக – பாஜக இடையே கனவிலும் பிரச்னை வராது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் கடந்த ஜுன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகள், ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

இதையும் படியுங்கள் : வெளுத்து வாங்கிய கனமழை… வீடு இடிந்து இளைஞர் உயிரிழப்பு!

இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் திமுகவினர், அதிமுக-வை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும், அண்ணாவைப் பற்றிப் பேசினால் கடந்தகாலத்தில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இதனால் பாஜக – அதிமுக கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், “2026ல் எங்களுடைய ஆட்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும். அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. கனவிலும் பிரச்னை வராது. அதிமுக – பாஜக கூட்டணி உண்மையான கூட்டணி, வெல்லும் கூட்டணி” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.