மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து சிகிச்சைகளும் முறைப்படி வழங்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விசாரணையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் உள்ளடக்கிய எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆணையத்தில் அளிக்கப்பட வாக்குமூலங்களில் ஆவணங்களையும், அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கைகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 3 பக்க அறிக்கையை அளித்துள்ளனர். அதில்,
- ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்ததாகவும், அதற்குச் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்த போது திராட்சை, கேக், இனிப்புகளையும் சாப்பிட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.
- 20.09.2016 அன்று இரவு 10 மணிக்கு ஆம்புலன்ஸ் கேட்டு ஜெயலலிதா இல்லத்திலிருந்து தொடர்பு கொண்டதாகவும், அப்போது இருந்த உடல்நிலை பார்த்து, முதற்கட்ட சிகிச்சை அளித்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்ப மருத்துகள் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவியும் ஜெயலலிதாவிற்குப் பொருத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து லண்டன் மருத்துவர் ரிச்சட் பிலே உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவக் குழுவும் சிசிக்சை அளித்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘சென்னையில் ஆட்கடத்தல்; துப்பாக்கி முனையில் 6 பேர் கைது!’
- டிசம்பர் 3-ஆம் தேதி ஜெயலலிதா உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், டிசம்பர் 4-ஆம் தேதி மூச்சுவிடுவதற்கு பெரும் சிரம் பட்டதாகவும், இதைத் தொடர்ந்து இதயம் செயலிழந்தால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிசம்பர் 5-ஆம் தேதி உரிய மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உடலைப் பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்தது என்பதை உறுதி செய்து டிசம்பர் 5-ம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவக் குழு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வரும் 23-ஆம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.








