ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடப்பு தொடரில் 237.30 என்ற பிரமிக்க வைக்கும் ஸ்டிரைக் ரேட்டுடன் 776 ரன்களைக் குவித்தார். இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடக்கம்.
இதன் மூலம் ஆரஞ்சு தொப்பி (776 ரன்கள்), மிகவும் மதிப்புமிக்க வீரர் (MVP), சீசனின் வளர்ந்து வரும் வீரர், சூப்பர் ஸ்டிரைக்கர் மற்றும் சூப்பர் சிக்ஸர்கள் உட்பட ஐந்து முக்கிய விருதுகளை அவர் வென்றார் .
மேலும் இந்த சீசனில் 72 சிக்ஸர்களை விளாசி மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் படைத்திருந்த 59 சிக்ஸர்கள் என்ற ஐபிஎல் சாதனையை முறியடித்தார்.
இந்த நிலையில் ஐதராபாத் அணி ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன், சூர்யவன்ஷியின் ஆட்டத்தை புகழ்ந்துள்ளார்.
எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் 97 ரன்கள் விளாசிய சூர்யவன்ஷியை பற்றி அவர் கூறியதாவது:
இது எனது ஏழாவது ஐபிஎல் தொடர். நான் சில மிகச் சிறந்த வீரர்களுடனும் அவர்களுக்கு எதிராகவும் விளையாடியிருக்கிறேன். ஆனால் இதுபோல எதையும் நான் பார்த்ததில்லை.
அவர் (சூரயவன்ஷி) பந்தை மிகவும் நேர்த்தியாக அடிக்கிறார். நாங்கள் பவுன்சர்கள் வீசும்போது, அவர் அதை ‘தேர்ட் மேன்’ பகுதிக்கு மேல் அடிப்பார். ஃபுல் டாஸ், லோ ஃபுல் டாஸ் என எப்படி வீசினாலும், அவர் அவற்றையும் அடிப்பார். அப்போது நீங்கள், ‘சரி, ஒரு நிமிடம் பொறுங்கள், நாம் எங்கே பந்து வீசுவது?’ என்று நினைப்பீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.







