இந்தி பேசும்போது ஒருவித தயக்கம் ஏற்படுகிறது – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மேடைகளில் இந்தி பேசும்போது, நடுக்கம் மற்றும் ஒருவித தயக்கம் ஏற்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பத்திரிக்கையாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது, அவரை…

மேடைகளில் இந்தி பேசும்போது, நடுக்கம் மற்றும் ஒருவித தயக்கம் ஏற்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பத்திரிக்கையாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது, அவரை இந்தியில் பேசுமாறு அங்கிருப்பவர்கள் கூறினர். உடனே, மேடையில் இந்தியில் பேசும் போது தனக்கு நடுக்கம் ஏற்படும் என அவர் தெரிவித்தார். தான் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்றும், தமிழ்நாட்டிலேயே கல்லூரி படிப்பை பயின்றதாகவும் தெரிவித்த அவர், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது தமிழ்நாட்டில் இந்திக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்ததாக கூறினார்.

 

அந்த சமயங்களில் இந்தி அல்லது சமஸ்கிருதத்தை முதன்மை மொழியாக தேர்வு செய்து படிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருந்தாலும், மாநில அரசின் ஊக்கத் தொகை கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். மேலும் வளர்ந்த பிறகு ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது சற்று சிரமம் என்று அவர் தெரிவித்தார். தனது கணவரின் தாய்மொழியான தெலுங்கை தன்னால் எளிதாக கற்றுக்கொள்ள முடிந்தது என்றும், அதே சமயம் இந்தியை கற்றுக்கொள்வதில் சிரமம் இருந்ததாகவும், ஒருவேளை அது தனது கடந்த கால அனுபவங்கள் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் பதில் கூறினார்.

மிகுந்த தயக்கத்துடனே இந்தியில் பேசுவதால், தன்னால் சரளமாக இந்தியில் பேச முடிவதில்லை என்றார். சுமார் 35 நிமிடங்கள் இந்தியில் பேசிய நிர்மலா சீதாராமன் தனது இந்தி மொழி தொடர்பான தயக்கத்தை பற்றி மட்டுமே விளக்கி கூறினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் சரியான வழியில் செல்லவில்லை என்றும், வாஜ்பாய் மற்றும் மோடி ஆட்சிகளில் இந்தியாவின் உட்கட்டமைப்பு சிறந்த முறையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

ஏர் இந்தியா தனியார் மயமாக்கப்படும் வரை நாள்தோறும் 20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்து வந்ததாகவும், இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி சரியான முடிவை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மோடி ஆட்சியில் வெளிப்படை தன்மையான பலன் பரிமாற்றம் நடைபெற்று வருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.