தமிழகத்தில் இன்புளூயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் கே.என் நேரு, மா சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் இலச்சினை மற்றும் குறும்படத்தை வெளியிட்டு பரிசுகள் வழங்குகின்றனர்.
ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு என தனி இலச்சினை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள். 3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால், முதலில் அரசு தான் நிற்கும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதட்ட நிலையை உருவாக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன் என்றார்.








