தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்றும், தவறான செய்திகள் பரவி வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி நினைவு மாரத்தான் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவு சென்னையை அடுத்த வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்றும் பாதிப்பு ஏற்பட்டால் நாங்களே ஊடக நண்பர்களை அழைத்து கூறுவோம் என்றும் விளக்கமளித்தார்.
நேற்று தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தது தவறானது என தெரிவித்தார். இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மதுரையில் பெய்த கனமழை பாதிப்பு குறித்து வருவாய்துறையினர் ஆய்வு செய்து பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மழைநீர் வடிந்த பின்பு மருத்துவ முகாம் அமைக்க வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறோம். திருச்சி, மதுரை, கோவை சென்னையில் தீவிரமாக கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
– இரா.நம்பிராஜன்








