தமிழ்நாடு தமிழகம் எல்லாமே இந்தியாவின் ஒரு அங்கம் தான். இந்தியாவின் மிகப்பெரிய அங்கம் இந்தியாவிலிருந்து தனியாக பிரித்து பார்க்க முடியாது. தமிழ்நாடு, தமிழகம் எவ்வாறு வேண்டுமானாலும் அழைக்கலாம் தவறில்லை என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
கோவை எல்.அன்ட்.டி பைபாஸ் அடுத்த இடையர்பாளையம் பகுதியில் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பாஜக தேசிய
செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, தமிழகத்தில் பொங்கல் கொண்டாடுவது போன்று எந்த திருவிழாவும் கொண்டாடுவது இல்லை. தமிழக அரசு பொங்கல் பரிசாக வெறும் ஆயிரம் ரூபாய், ஒரு கரும்பு கொடுப்பது மிகவும் வெட்க கேடானது என்று கூறினார்.
பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுக்கு
பதில் அளித்த குஷ்பு, ஒருவர் சொல்கிறார் என்பதற்காக பாஜகவில் இருந்து யாரும் வெளியில் போகவில்லையே, நானும் பாஜகவில் தான் இருக்கிறேன். ஒரு சிலர் போவதால் பாதுகாப்பு இல்லை என்று கூறமுடியாது. பாஜகவில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது.
திமுகவைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் என்னை பற்றி இழிவாக தவறாக பேசும் போது, பாஜக சார்பில் போராட்டம் நடத்தி புகார் அளித்து, அந்த பேச்சாளரிடம் நேற்று முன்தினம் கையெழுத்து வாங்கி கடுமையாக கண்டித்து மன்னிப்பு கேட்டுள்ளார் எனவும், பாதுகாப்பு இல்லை என ஒவ்வொருக்கும் ஒரு மனநிலை இருக்கும்போது எல்லாருக்கும் அப்படி இருக்காது. ஜனநாயக ரீதியாக எல்லோருக்கும் பேசுவதற்கும் சுதந்திரம் இருக்கிறது என தெரிவித்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மிகவும் துணிச்சலான தலைவர். துணிச்சலாக, அதிரடியாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். சட்டரீதியாக, தைரியமாக, துணிச்சலாக பேசக்கூடிய தலைவர் அண்ணாமலை.
நான் மும்பையில் பிறந்தாலும் 36 ஆண்டுகள் தமிழகத்தில் தான் இருக்கிறேன். நான் உண்மையான ரத்தம் கொண்ட தமிழச்சி எனவும், தமிழ்நாடு தமிழகம் எல்லாமே இந்தியாவின் ஒரு அங்கம் தான். இந்தியாவின் மிகப்பெரிய அங்கம் இந்தியாவிலிருந்து தனியாக பிரித்து பார்க்க முடியாது. தமிழ்நாடு தமிழகம் எவ்வாறு வேண்டுமானாலும் அழைக்கலாம் தவறில்லை எனவும் தெரிவித்தார்.







