கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம்- செவிலியர் கூட்டமைப்பு

எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் காவல்துறை அனுமதி அளித்தாலும், இல்லை என்றாலும் கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் என செவிலியர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செவிலியர்களுடன்…

எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் காவல்துறை அனுமதி அளித்தாலும், இல்லை என்றாலும் கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் என செவிலியர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செவிலியர்களுடன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தைக் குறித்தும் அடுத்தக்கட்ட
நடவடிக்கைகள் தொடர்பாகவும் எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்கள் கூட்டமைப்பை
சேர்த்தவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சங்கத்தின் துணை
தலைவர் உதயகுமார், அனைத்து எம்.ஆர்.பி. செவிலியர் சங்க மாநில நிர்வாகிகள் சார்பில்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் நடந்த பேச்சு வார்த்தையில், பல விஷயங்கள் பேசப்பட்டது.

அந்த பேச்சு வார்த்தை எல்லாம் முன்பே திட்டமிடப்பட்டது போன்று இருந்தது. 11
மணிக்கு வர சொல்லி 4 மணிக்கு மேல் தான் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நாங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் வரவில்லை என்கிறார்கள். எந்த அடிப்படையில்
அப்படி சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு முறையான பதில் இல்லை. அதிகாரிகள்
தரவுகளை மறைக்க பார்க்கிறார்கள்.

இந்தப் பிரச்சினை முதல் முறை இல்லை. ஏற்கனவே இதுபோன்ற தற்காலிக ஆரம்ப சுகாதார பணிக்கு மாற்றுவதாக கூறப்பட்ட பொழுது டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம்
நடத்தினோம். தொடர்ந்து இப்போதைய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கலந்து கொண்ட கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. அப்போது நாங்கள் இட
ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படவில்லை என்றனர்.

இது குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு எண்களில் 2,300 க்கும் மேற்பட்டோர் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று அறிக்கை சமர்ப்பித்தது. அந்த கமிட்டி கொடுத்த தகவல் பொய்யா? அப்படியெனில் அவர்கள் மீது விசாரணை கமிட்டி வையுங்கள்.

7/5/2020 இல் போடப்பட்ட ஆணையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் 3 நாட்களுக்குள் செவிலியர் பணிக்கு வர வேண்டும் என்றும், அதில் சேரவில்லை என்றால் இனி எந்த சேர்க்கையிலும் உங்கள் பெயர் சேர்க்கபடாது என்று அரசாணை அளிக்கப்பட்டது. அப்போது எங்களை தேவைப்படும் போது மிரட்டி பணியில் சேர வைத்தனர்.

அதனால் தனியார் மருத்துவமனையில் அதிக சம்பளத்தில் பணியாற்றி வந்த சிலர் கூட
கொரோனா காலத்தில் பணியாற்றினார்கள். இப்போது, நாங்கள் சொல்வது பொய்யா?
கமிட்டி சொல்வது பொய்யா ? இல்லை அந்த மீட்டிங்கில் நடந்தது பொய்யா சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.

ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும். யார் மீது
தவறு என்று விசாரிக்க வேண்டும். நாங்கள் இப்போதே நிரந்தர வேலையை கேட்கவில்லை. காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிகமாக பணி செய்ய அனுமதி கேட்கிறோம். காவல் துறை அனுமதி கொடுத்தால் சட்ட விதிக்கு உட்பட்டு அடுத்த கட்டமாக கோட்டையை முற்றுகையிடுவோம் . அரசு அனுமதி அளிக்கவில்லை என்றாலும் எங்கள் குடும்பத்தினர் மற்றும் அனைத்து சங்கங்களுடன் இணைந்து முற்றுகையிடுவோம் என்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.