பழங்குடியின மக்களுக்கு மயான பாதை இல்லாத நிலை – முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவலம்!

காட்டுமன்னார்கோவிலில் பழங்குடியினர் மக்களுக்கு மயான பாதை இல்லாததால் முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள குறுங்குடி வடக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 70 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் பல ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு முறையான பாதை வசதி இல்லாமல் அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் இறப்பவர்களுக்கு என்று உள்ள மயானத்தில்
இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்றால் கூட வயல்வெளியில் தூக்கி செல்லும் அவல நிலை இன்றும் உள்ளது. இந்நிலையில் நேற்று(ஜூன்.05) இதே பகுதியை அரசன் என்ற 70 வயது முதியவர் ஒருவர் இறந்துவிட்டார். இதையடுத்து இன்று காலை அவரது உடலை கிராமத்தினர் சுமார் ஒரு கிலோமீட்டர் விவசாய நெற் பயிர்களுக்கு இடையே வயலில் இறங்கி முட்புதர்களின் வழியாக உடலை எடுத்து சென்றனர்.

இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து  பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து மயான பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.