தமிழக அளவில் கட்டுரையில் சிறந்து விளங்கக்கூடிய 250 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் கையில் உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு பயிலும் 68 மாணவர்களை துபாய்க்கு கல்வி சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிற்கும் அழைத்து செல்லும் நிகழ்ச்சி தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘துபாய் அபுதாபி போன்ற பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகள் நூலகங்கள் போன்ற பல்வேறு இடங்களை இந்த மாணவர்கள் பார்வையிட உள்ளனர். ஐந்து பேர் கொண்ட ஆசிரியர்கள் குழுவும் இவர்களுடன் செல்ல உள்ளனர். கடந்த வருடமே இந்த கல்வி சுற்றுலா செல்ல வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது என கூறினார்.
ஆனால் துபாயில் ஒமிக்கிறான் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக இந்த சுற்றுலா செல்ல முடியவில்லை. இருந்த போதும் நம் குழந்தைகள் ஏமாற்றம் அடைந்து விடுவார்கள் என்பதனை கருத்தில் கொண்டு திட்டமிட்டபடி தற்போது இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். இந்த கல்வி சுற்றுலா என்பது இந்த மாணவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என நம்புகிறோம் என பேசினார்.
மேலும், தமிழக அளவில் கட்டுரையில் சிறந்து விளங்கக்கூடிய 250 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் கையில் உள்ளது. படிப்படியாக இதுபோன்ற மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.







