கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார். எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பிய புகார்களின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.300 கோடியில் உருவான பெரியார் அறிவுலகம்!
கோவை காந்திபுரத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் இதனைத் திறந்து வைத்தார். நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகத்தில் டிஜிட்டல் நூலகம், சர்வதேச மின் நூல்கள், கணினி வசதிகள், அறிவியல் மையம், கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
ரூ.350 புத்தகம் ரூ.1,445-க்கு கொள்முதல்?
இந்நிலையில், பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், அங்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கட்டுரை ஒன்றில் குற்றம்சாட்டியிருந்தார். அதில், அதிகம் அறியப்படாத ‘அகல் விளக்கு’ என்ற பதிப்பகத்தின் பெயரில் வெளியிடப்பட்ட சுமார் 1,800 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிற பதிப்பகங்கள் ரூ.350-க்கு விற்பனை செய்யும் நாலடியார் நூலை, ‘சூர்யா பாலு’ என்ற பெயரில் எழுதப்பட்ட ‘நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்ற 300 பக்கப் புத்தகமாக ரூ.1,445-க்கு வாங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுமட்டுமின்றி, அந்தப் பதிப்பகம் வெளியிட்ட ஒரு நூலில் மதுரைக் காஞ்சியை எழுதியவர் குறித்த தகவல் தவறாக இடம்பெற்றுள்ளதாகவும், மற்றொரு நூலில் கீழடியில் கிடைத்த சிற்பம் எனக் குறிப்பிட்டு நந்தியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார். பல நூல்களில் வரலாற்றுத் தகவல்கள் மற்றும் குறிப்புகள் தவறாக இடம்பெற்றுள்ளதாகவும், புத்தகங்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்றும் அவர் தனது கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பெரியார் பெயரில் அமைக்கப்பட்ட அறிவுலகத்திலேயே இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட பெருமாள் முருகன், இந்தப் புத்தகக் கொள்முதல் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும், முறைகேட்டில் தொடர்புடைய அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
‘பெரியார் பெயரிலேயே ஊழலா?’ – அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்!
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், பெருமாள் முருகனின் கட்டுரையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “கோவையில் பெரியார் அறிவுலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கட்டுரையைப் படித்தபோது ஒருபுறம் வேதனையாகவும், மறுபுறம் சிரிப்பாகவும் இருந்தது. நானும் ஒரு வாசகர்தான். பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில புத்தகங்களின் பெயர்களைக்கூட எனது வாழ்நாளில் கேள்விப்பட்டதில்லை. ஒரு பதிப்பகத்திலிருந்து மட்டும் 1,500 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. அப்படியொரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்தில்கூட இல்லை. கடந்த ஆட்சியில் பிப்ரவரி மாதமே இந்தப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது திமுக ஆட்சியில் நடைபெற்ற மெகா ஊழலுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
கீழடி பெயரில் போலிப் புகைப்படம்; விசாரணை தொடக்கம்!
பெரியார் பெயரிலேயே ஊழல் செய்திருப்பது வெட்கக்கேடானது. யாரென்றே தெரியாத எழுத்தாளர் பெயரில் கீழடி தொடர்பாகப் புத்தகம் வெளியிட்டுள்ளனர். அதில், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் என்று கூகுளில் இருந்து புகைப்படங்களை எடுத்துப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அப்படியொரு சிலையே கீழடியில் கிடையாது. அதேபோல், ‘பாரதியாரின் கதைகள்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டுள்ளனர். அந்தக் கதைகளைப் படிக்காமலேயே பாரதியார் இறந்துவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு அதன் தரம் உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கூட இதைவிடச் சிறப்பாக எழுதுவார். இந்த முறைகேடு தொடர்பான விசாரணை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில் யாரெல்லாம் தொடர்புடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரின் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும்.” இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.




