தமிழிநாட்டில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் இன்று (மார்ச் 27) ஆகும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனால் விறுவிறுப்பாக வெட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், 3.06 கோடி ஆண்களும், 3.17 கோடி பெண்களும், 8,465 மூன்றாம் பாலினத்துவரும் அடங்குவர். முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.90 லட்சம். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில் பறக்கும் படையினரால் நேற்றுவரை ரூ. 33.31 கோடி பணம், ரூ.33.35 கோடி மதிப்பிலான நகைகள், ரூ. 1.72 கோடி மதிப்பிலான மதுபானங்கள் உள்பட மொத்தம் ரூ.69.70 கோடி மதிப்பில் பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.








