தமிழ்நாடு ,கர்நாடகா , புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களிடையே இடையே பாயும் முக்கியமான ஆறு தென் பெண்ணையாறு ஆகும். தென் பெண்ணையாற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடகம் சட்டத்துக்கு புறம்பாக அணைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தமிழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தென் பெண்ணையாறு விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைத்து தீர்வு காணுமாறு 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் தீர்ப்பாயம் அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான பெண்ணையாறு பிரச்சினையில் உடன்பாடு காண உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு பேச்சுவார்த்தை குழுவை மத்திய அரசு அமைத்தது. ஆனால் இந்த கூட்டத்தில் கூட்டத்திலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தீர்வு காண பேச்சுவார்த்தைக் குழு தோல்வியடைந்தது. ஆகையால் மத்திய அரசு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதே நேரம், கர்நாடக அரசு தரப்பில், மத்திய அரசு பேச்சு வார்த்தையை தொடர வேண்டும் என்று கோரப்பட்டது.
தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞர், தென் பெண்ணையாறு விவகாரத்தில் ஒரு இறுதி முடிவை எட்ட மத்திய அரசு உதவ தயாராக உள்ளது ஆனால் இரு அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தனர்.







