தேனியில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த சிறுசேமிப்பு நிறுவன உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனியில் கடந்த 2011ம் ஆண்டு ஜெயம் வெல்த் அக்ரோ டெக் என்ற தனியார் சிறுசேமிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மூலமாக பொதுமக்களிடம் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தினால் 60 மாத முடிவில் 90,000 ரூபாய் கிடைக்கும் என வாட்ஸ் அப் மூலமாக நம்ப வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்ய ஏஜெண்டுகளை நியமனம் செய்து அவர்களிடம் இருந்து பணம் மாதந்தோறும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 5 ஆண்டுகள் முடிவில் பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பி தராத நிலையில் இது குறித்து பணம் செலுத்திய பொதுமக்கள் சம்மந்தபட்ட நிறுவனத்தை முற்றுகையிட்டனர். ஆனால் ஜெயம் வெல்த் அக்ரோ டெக் நிறுவனம் சார்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை. மேலும் ஜெயம் அக்ரோ டெக் உரிமையாளர் ராஜேஷ் தலைமறைவாகியது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்நிறுவனத்தின் ஏஜெண்டுகளுக்கு நெருக்கடி தந்ததால் அவர்கள் 2019-ம் ஆண்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
அளித்தார். இந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து பணத்தை வசூலித்த ஏஜெண்டுகள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மீண்டும்
புகார் அளித்தனர்.
அதில், ஜெயம் வெல்த் அக்ரோ டெக் நிறுவனத்தை நம்பி பொதுமக்களிடம் தாங்கள் பணம் வசூலித்து தந்ததாகவும், ஆனால் பணத்தை பெற்ற நிறுவன உரிமையாளர்
தப்பி ஓடி விட்டதாகவும், இதனால் பணத்தை வசூலித்த எங்களை பொதுமக்கள் அவதூறாக பேசி வருவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம்
முழுவதும் பலரிடம் பணம் வசூலித்து சுமார் 50 கோடி அளவில் பணம் ஏமாற்றபட்டுள்ளதாகவும், எனவே பாதிக்கபட்ட மக்களுக்கு பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் மனு அளித்தனர்.
– இரா.நம்பிராஜன்








