பீகாரில் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை வரும் 24ந்தேதி முதலமைச்சர் நிதிஷ்குமார் நிரூபிக்க உள்ள நிலையில் மகாகத் பந்தன் கூட்டணியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை சபாநாயகர் விஜயகுமார் சின்கா தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த ஐக்கிய ஜனதா தளம் கடந்த செவ்வாய்க் கிழமை திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணியில் இணைந்த நிதிஷ்குமார் புதிய கூட்டணி அரசை அமைத்து கடந்த புதன்கிழமை பீகாரின் முதலமைச்சராக 8வது முறையாக பதவியேற்றார்.
வரும் 24ந்தேதி மகாகத் பந்தன் கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் சின்கா, சபாநாயகராக உள்ள நிலையில் அவரை மாற்றிவிட்டு நம்பிக்கை வாக்குகோருவதுதான் நல்லது என முதலமைச்சர் நிதிஷ்குமார் கருதுவதாகக் கூறப்படுகிறது. அதற்கேற்றவாறு விஜய் குமார் சின்காவிற்கு எதிராக மகாகத்பந்தன் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
ஆனால் சபாநாயகர் விஜய் குமார் சின்கா வேறு ஒரு அதிரடி வியூகத்தை வகுப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு ஆயுதப்படி காவல்துறை சட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றபோது பீகார் சட்டப்பேரவையில் கடும் ரகளை நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவை ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்த நிலையில் தற்போது அந்தக் குழுவின் கூட்டத்தைக் கூட்டி புதிய அறிக்கை தர சபாநாயகர் விஜயகுமார் சின்கா கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக எம்.எல்.ஏ ராம் நாராயண் மண்டல் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு புதிதாக தரும் அறிக்கையை வரும் 24ந்தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து 30க்கும் மேற்பட்ட மகாகத்பந்தன் கூட்டணி எம்.எல்.ஏக்களை சபாநாயகர் விஜயகுமார் சின்கா தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் நிதிஷ்குமார் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்படும் என பீகார் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.







