தேனி: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கொள்ளை

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் இருந்த டிவியை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின்…

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் இருந்த டிவியை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் பண்ணை வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின், கீழ் தளத்தில் பொதுமக்களை சந்திப்பதற்கும், முக்கிய நபர்களை சந்திப்பதற்கும் தனித்தனியே இரண்டு அறைகள் உள்ளன. மேல் தளத்தில் ஓபிஎஸ் ஓய்வெடுப்பதற்கான அறை அமைந்துள்ளது. இந்த வீட்டில் அவர் அவ்வப்போது ஓய்வெடுப்பதும், தனது ஆதரவாளர்களுடன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதும் வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு இந்த பண்ணை வீட்டின் பின்புற மதில் சுவரைத் தாண்டி வந்த கொள்ளையர்கள், மேல் தளத்திலுள்ள கதவை உடைத்துள்ளனர். மேலும் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து பார்த்தபோது, நகை, பணம் ஏதும் இல்லாததால், அங்கிருந்த 54 இன்ச் டிவியை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா அளித்த உத்தரவின் போரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.