ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரில் இலங்கையை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.
வங்கதேசத்தில் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் பங்கேற்று விளையாடியது. டி20 நடைமுறையில் நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்று விளையாடின. இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணி மோதியது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பீல்டிங் செய்தது. தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் அணியினரின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழந்த நிலையில், 65 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக இந்திய அணியில் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளையும், ராஜேஸ்வரி கெய்க்வாட் மற்றும் சிநேஹா ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 66 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஸ்மிரிதி மாந்தனா 25 பந்துகளில் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 7-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது என்ற சாதனையை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.
-இரா.நம்பிராஜன்









