காங்கிரஸ் தலைவர் தேர்தலில், சசிதரூருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதரம்பரம் அறிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் மல்லிகர்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. வருகிற 17-ம் தேதி இவர்களில் யார் கட்சியின் தலைவர் என்பது தெரிந்துவிடும் நிலையில், இருவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டள்ளனர்.
இதனிடையே, மல்லிகர்ஜுன கார்கே நேரு குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால், சோனியா காந்தியின் ஆதரவு அவருக்கு இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், தேர்தலில் இருவருமே சமம் என்றும், நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என தலைமை விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் எந்த ஒரு வேட்பாளருக்கும் வெளிப்படையாக ஆதரவு அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நடந்து வாக்களிக்க தகுதி உடையவர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம்.
சோனியா காந்தி ஏதோ ஒரு வேட்பாளரை மட்டும் விரும்புகிறார்கள் என்று தவறாக சிலர் பரப்பி வருகிறார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. எனவே, வாக்களிக்க தகுதியுடைய அத்தனை காங்கிரஸ் நண்பர்களும் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். தான் சசிதரூருக்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்








