வாரிசு, துணிவு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதா?

விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு உள்ளிட்ட படங்களுக்கு இதுவரை எந்த திரையரங்குகளும் ஒதுக்கவில்லை என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித் திரைப்படங்கள்…

விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு உள்ளிட்ட படங்களுக்கு இதுவரை எந்த திரையரங்குகளும் ஒதுக்கவில்லை என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித் திரைப்படங்கள் சில ஆண்டுகளாக ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்படுவதில்லை. கடைசியாக 2014ஆம் ஆண்டு ஜில்லா, வீரம் திரைப்படங்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் வரும் 2023 பொங்கல் சமயத்தில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

விஜய், அஜித் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதையே அவர்களது ரசிகர்கள் ஒரு திருவிழாவாக கொண்டாடுவார்கள். பொங்கல் திருவிழாவின்போது வெளியாகினால் அதனை எப்படி கொண்டாடுவார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வாரிசு, துணிவு திரைப்படங்களை முன்வைத்து இப்போதே சமூக வலைதளங்களில் விஜய், அஜித் ரசிகர்களின் போர் தொடங்கிவிட்டது.

இதனிடையே பொங்கலுக்கு துணிவு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளும், வாரிசு திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின. ஆனால், இந்தத் தகவலை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பேட்டியில், “அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. துணிவு படத்திற்கு 500க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவுகின்றன. ஆனால் இதுவரை எந்த படத்திற்கும் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தவறான தகவல்களை பகிர வேண்டாம்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.