துருக்கியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தொலைபேசியை பயன்படுத்திக்கொண்டே நடந்து வந்த இளைஞர் தீடீரென நிலைத்தடுமாறி துவாரத்தில் விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிறது.
இளைஞர்களுக்கு தொலைபேசியே உலகம் என மாறியுள்ள நிலையில், தன்னை சுற்றி நடப்பதை கூட அறியாமல் இணையத்தில் மூழ்கியுள்ளனர். அதற்கு உதாரணம் கூறும் வகையில் துருக்கியில் நடந்த சம்பவம் அமைந்துள்ளது. அங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் அப்துல்லா முஹ்ட் என்ற 19 வயது இளைஞர் ஒருவர் தன்னை மறந்து செல்போனை உபயோகித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர் செல்லும் வழியில் மேல்தளத்தில் இருந்து கீழ்தளத்திற்கு பொருட்களை இறக்குவதற்காக அமைக்கப்பட்ட துவாரம் ஒன்று இருப்பதை கவனிக்காமல் அதில் சறுக்கி விழுந்தார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக கீழே பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால், அதன்மீது விழுந்து எந்த காயமும் இன்றி தப்பினார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்தக்காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பலர் ஆபத்தை உணராமல் செல்போனில் பேசிக்கொண்டு, ஹெட்போன் பயன்படுத்திகொண்டு சாலைகளை கடந்து செல்கின்றனர். மேலும், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி கொண்டு சாலையில் தங்களை மறந்து செல்லும்போது விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். செல்போன் உலகத்தை விட்டு வெளி உலகம் ஒன்று இருப்பதை உணர்ந்தாலே இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.







