ஆந்திராவில் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை பொதுமக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அப்பிகானிபள்ளி கிராமத்தில் 60 வயது மூதாட்டி ஒருவர் தனியே வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் அவரின் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை தாக்கியதோடு அவரிடம் இருந்த 4 சவரன் நகைகளை பறித்துள்ளார். அத்துடன் அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் ஆவேசமடைந்த பொதுமக்கள் தனது வீட்டில் பதுங்கியிருந்த மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மூர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.







